×

உளவியலும் உலகமும்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

மனவெளிப் பயணம்

“என்கிட்ட கொஞ்சம் பேசச் சொல்லுங்க, எப்படி மாற்றிக் காண்பிக்கிறேன் பாருங்க” இந்த வாக்கியம்தான் இப்ப ட்ரெண்டிங்கான வாக்கியமாக பார்க்கிறேன். ஒரு நபரின் மூளையில் உள்ள எண்ணங்களை அத்தனை எளிதாக மாற்ற முடியுமா என்ற கேள்வி ஒரு மனநல ஆலோசகராக எனக்குத் தோன்றும்.

நடிகர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் காண்பித்தது போல், அனைவரையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? என்றால், முடியும் என்பதே அதிர்ச்சிகரமான உண்மையாக இருக்கிறது. ஆனால் அதைச் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான கொள்கை, தலைமைக்கான முகம் என்று மக்களுக்குத் தேவைப்படும். அந்த நேரத்தில்தான் கூட்டமாக மக்களின் எண்ணங்களை மாற்ற முடியும்.

அந்த நம்பிக்கையை வைத்து தனி ஒருவன் கிட்ட நெருங்கிட முடியாது. ஒரு தனி நபரின் எண்ணங்களை எல்லாம் எளிதாக மாற்ற முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை. அவன் முற்றிலும் ஒரு சமூகப்பிராணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இயற்கையில் ஒரு மனிதன் தன்னுடைய அக உலகைப் பற்றி வெளிப்படுத்த விரும்பும் போது மட்டுமே எழுத்தும், பேச்சும் உருவாகி இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். பிராய்டும், லக்கானும் உளவியல் மருத்துவர்கள் ஆன போதும், அவர்கள் உளப்பகுப்பாய்வாளராக இருப்பதையே விரும்பினார்கள்.

அப்பொழுது மட்டுமே சமூகத்தின் முன்னும், கலாச்சாரத்தின் முன்னும் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து மனிதனின் சுயத்தைப் பற்றி கூடுதலாக அறிய முடியும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.மருத்துவ அறிவியலில் 1930க்கு முன் வரை உடலின் பாதிப்புதான் மனதைப் பாதிக்கிறது என்று நம்பினார்கள். அதன் பின்தான் உடலின் பாதிப்புக்கும், மூளையின் பாதிப்புக்கும் தொடர்பு வேறு வேறு என்று விளக்கம் கொடுத்தார்கள்.

‘‘காரணமில்லாமல் காரியமில்லை” இதுதான் ப்ராய்டிய உளவியலின் அடிப்படை சித்தாந்தமாகும்.மனிதனுக்கு தன்னுடைய சுயம் பற்றிய புரிதல் ஏற்பட்டவுடன், அதில் உள்ள ஆசை, பாலியல் தன்மை, அங்கீகாரம் போன்ற பிரச்சனைகளுக்கு மக்கள் அனைவரும் போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் மனிதனின் மன ரகசியம் என்பது நாளுக்கு நாள் அதிகமாகி, அதை வெளிப்படுத்த தெரியாமல் குழப்பிக் கொள்ளும் சூழலில் இருக்க நேரிட்டது.

இந்த சுயதேடலின் விளைவாக கலாச்சார மாற்றத்தில் குடும்ப உறவுகள் மற்றும் சமூக உறவுகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இதன் பாதிப்பாக பாரனாய்டு, ஸ்கீசோப்ரெனியா, பைபோலார் டிஸ்ஆர்டர், அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர், ஈட்டிங் டிஸ்ஆர்டர், ஆங்க்சிட்டி, மூட் டிஸ்ஆர்டர், பேனிக் டிஸ்ஆர்டர், ஸ்பெசிபிக் போபியா, மேனியா, சிண்ட்ரோம்ஸ் என பலவகையான மனநோய்கள் வர ஆரம்பித்து விட்டன.

உலக மனிதர்களின் மனம் அனைத்தும் ஒன்றுதான் என்று பேசினாலும், ஒவ்வொரு நாட்டிலும் நிலம், கலாச்சாரம், பண்பாட்டுக்கு ஏற்றவாறு மன ரீதியான நம்பிக்கைகளும், அதில் ஏற்படும் குழப்பங்களுக்குப் பதிலாக நம்முடைய அறிவியல் மருத்துவமும் செயல்படுகிறது. அப்படிப் பார்த்தோமானால் நம் இந்தியாவில் உளவியல் மருத்துவமும், உளவியல் நிபுணர்களும் அதற்கு ஏற்றவாறு கல்வியுடன் நம் கோட்பாடுகளும் அதன் பிரதிபலிப்பும் என்ன மாதிரி நம் மக்களை சந்தோஷமடைய வைக்கிறது, நம் மக்களை காயப்பட வைக்கிறது என்றும் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த மாற்றத்தின் அடிப்படையில் உளவியல் மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் முறையான கல்வி அறிவுடன், பட்டயப்படிப்புடன் வர ஆரம்பித்தார்கள்.உளவியலில் மருத்துவ சிகிச்சை இருக்கிறது என்பது நமக்குத் தெரிவதற்குப் பல ஆண்டுகள் ஆனது. மக்களிடம் வெளிப்படையாக சொல்வதற்கு இலக்கியமும், திரைப்படங்களும்தான் உதவியாக இருந்தன. தமிழ் திரைப்படமான டைரக்டர் தர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை படமும், பி. மாதவன் இயக்கத்தில் வெளியான நிலவே நீ சாட்சி படமும் உளவியல் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தன. ஆனாலும் அவற்றில் இன்று வரை ஒரு தெளிவான பார்வையைத் தரவில்லை.

உளவியல் மருத்துவம் பற்றி பேசும் படங்களில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தை குழந்தைத் தன்மையாக இருக்கும் என்றே காண்பிக்கப்படுகிறது அல்லது கொலைகாரனாகக் காண்பிக்கப்படுகிறது. உண்மையில் நம் மக்களுக்கும் மனநோய் மற்றும் மனஅழுத்தம் இரண்டுக்கும் இன்றும் வித்தியாசம் தெரியவில்லை. அதனால் யாருக்கு மருந்து, மாத்திரைகளுடன் உள்ள சிகிச்சை தேவை, யாருக்கு மனநல ஆலோசகரின் உதவி தேவை என்ற புரிதல் சமூகத்தில் உருவாகவில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் அறிவியலும், கல்வியும் சேர்ந்து விதவிதமான உதவியாளர்களையும், நிபுணர்களையும் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். உளவியல் மருத்துவர், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், மனநல ஆலோசகர் என்று பிரித்து உளவியல் துறையில் செயல்பட வைக்கிறார்கள்.அதனால் பலதரப்பட்ட வகையில் தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை முறையாக கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் சிகிச்சையின் முடிவில் எதிர்பார்த்த பலன்களும் கிடைப்பதில்லை.

மனித மனம் விருப்ப நிலையில் இருக்கும் பொழுது தேர்வு செய்யும் வாய்ப்புகளோடு கட்டற்ற சுதந்திர நிலையில் இயல்பாக இயங்குகிறது. மனித மனம் விழைவு நிலையில் இயங்கும் பொழுது போட்டியாளர் மனநிலைக்கு மாறி விடுகின்றது. சக போட்டியாளர்களை வென்று, விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறது. மனித மனம் வேட்கை நிலையை எட்டும் பொழுது, தீவிர மனநோய் குணாம்சத்துடன் பிற உணர்வுகளை பற்றிக் கவலைப்படாமல், பிற போட்டியாளர்களை கொன்று ஒழிப்பதைப் பற்றி சற்றேனும் கவலை கொள்ளாமல், ஒரு ஆக்ரோஷமான மிருக மனநிலையை எட்டி விடுகின்றது.

இயல்பாக ஏற்படுகின்ற பசி, பசிக்கான உணவுத் தேடல், மகிழ்ச்சி மற்றும் நகைச்சுவை, காதல் மற்றும் காமம், சோகம், அழுகை, கோபம், ஆக்ரோஷம், வீரம், பயம், வெறுப்பு, விரக்தி இந்த உணர்வுகளால் மட்டுமே மனிதன் பெருமளவில் பாதிக்கப்படுகின்றான். இந்த உணர்வுகளில் ஏதோ ஒன்று அதீத நிலையை அடையும் பொழுது, அது மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றது. இந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டு தீவிர நிலையை அடையும் பொழுது மன நோயாக மாறுகிறது. இந்த உணர்வுகளை கட்டுப்படுத்தும் வேலைகளை கலையும், இலக்கியமும் வடிகாலாகச் செய்து கொண்டு இருக்கிறது.

உதாரணத்துக்கு, அந்நியன் பட ஹீரோ விக்ரம் போல் பாதிக்கப்படும் போது மனநோய்க்கு மருத்துவ சிகிச்சை மூலம் மருந்து மாத்திரைகள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமுக்கு IQ டெஸ்ட் எடுத்து வரச் சொல்லுவார்கள், அந்த மாதிரி டெஸ்டிங் டூல் மூலம் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பரிசோதனை செய்வார்கள். கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் கொடுக்கும் ரிப்போர்ட் வைத்து உளவியல் மருத்துவர் சரிபார்ப்பார்கள்.

விஷால் நடித்த இரும்புத் திரையில் கோபம் ரொம்ப அதிகமாக வருது, கவுன்சிலிங் போயிட்டு வாங்க என்று சொல்லுவார்கள். சிலர் மனம் விட்டு பேசினாலே, அவர்களுக்கு பல பாரங்கள் குறையும். அதில் துளிகூட சந்தேகம் இல்லாமல், இந்த கலாச்சார அழுத்தங்கள், மூட நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல், திறந்த மனதுடன் அறிவியல் பார்வையில் ஆழ்மன ரகசியங்களை கேட்கும் நபர்கள் தான் மனநல ஆலோசகர்கள்.

இப்படியாக நம் மக்களின் மன ஆரோக்கியத்துக்கு ஏற்றவாறு பல துறை நிபுணர்களை இந்தியன் சைக்காட்ரிக் மெடிக்கல் அமைப்பில் நியமிக்கிறார்கள்.உண்மையில் இந்தப் படிப்பு எல்லோராலும் படிக்க முடியுமா என்றால்? அது கொஞ்சம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இங்கு நாம் எல்லாரும் குடும்ப அமைப்பு மற்றும் கடவுள் நம்பிக்கையுடன் அல்லது நாத்திகராக இருக்கும் நபர்கள் என்று பலரும் பலவித நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதில் நிபுணர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்கள் எதுவும் சொல்லாமல், புது ஐடியாலஜியை உருவாக்கும் திறம் உள்ள நபராக இருக்க வேண்டும்.

ஏனென்றால் இக்காலகட்டத்தில் நிஜ வாழ்வில் மேற்கத்திய கலாச்சார நிலையில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும், மனதளவில் இந்தியக் கலாச்சாரக் கோட்பாட்டுடன் இருக்கும் மனிதனுக்குள் நடக்கும் உளவியல் பிரச்சனைகள் தான் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைக் கையாள வேண்டும் என்றால், இத்துறை நிபுணர்கள் தங்களைத் தாங்களே மனதளவில் புதிய புதிய ஐடியாலஜிகளை ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருக்க வேண்டும். பலரின் ரகசியங்களை கேட்கும் போதும், அவர்களின் பாதிப்பு நிபுணர்களை எக்காரணம் கொண்டும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டும்.

வள்ளுவர் சொல்லுவது போல்,“ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்”“பிறர் மனதில் நிகழும் கருத்தை ஐயத்திற்கு இடம் இல்லாமல், நிச்சயமாக அறியக் கூடிய திறம் உடையவனை மனிதனாயினும் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்”.இக்குறளில் குறிப்பிட்டது போல், அந்த அளவிற்கு சிந்திப்பதில் மேம்பட்ட மனிதராக நாம் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மனித மனங்களின் ரகசியக் கதவுகளை படிப்படியாகத் திறப்போம்.

(பயணம் தொடரும்)

The post உளவியலும் உலகமும்! appeared first on Dinakaran.

Tags : Kunkumam ,Doctor ,Kayatri ,Mahdi ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்